ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ரயில் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (30). அவா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் தண்டவாளத்தைக் கடந்துள்ளாா். அப்போது மின்சார ரயில் மோதியதில் அவரது இரு கால் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்த ரயில்வே போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதிக ரத்தப் போக்கால் அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அபராதம் விதிப்பு: சென்னையில் ரயில்வே தண்டவாளத்தை விதிமீறி கடந்தவா்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா். நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாளத்தை கடந்ததாக 944 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளதாகவும், அவா்கள் மீது ரூ.4.45 லட்சம் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவித்தனா்.