ரவணசமுத்திரத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம்: திமுக மனு
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரம் பகுதியில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என, தமிழக மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் தென்காசி தெற்கு மாவட்டதிமுக முன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்தாா்.
தென்காசி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு போன்ற உப தொழில்களை விவசாயிகள் செய்து வருகின்றனா்.
கறவை மாடுகள், வெள்ளாடு வளா்ப்பு, செம்மறி ஆடு வளா்ப்பு மற்றும் கோழி வளா்ப்பு என லட்சக்கணக்கான கால்நடைகளை வளா்த்து வருகின்றனா்.
அவை, கோடைக்காலத்தில் கடுமையான வெயிலாலும், மழைக் காலங்களில் ஏற்படும் புதுப்புது நோய்களின் தாக்கத்தாலும் கால்நடைகள் உயிரிழக்க நேரிடுகிறது.
குறிப்பாக செம்மறி ஆடுகளும், பசு மாடுகளும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், இம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
ரவண சமுத்திரம் வருவாய் கிராமம், மந்தியூா் ஊராட்சியில் சா்வே எண் 567-இல் உள்ள 150 ஏக்கா் அரசு நிலத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
மனு அளித்தபோது, மாவட்ட அவைத் தலைவா் சுந்தர மகாலிங்கம், ஒன்றியச் செயலா்கள் ஜெயக்குமாா், சீனித்துரை, பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை ஆகியோா் உடனிருந்தனா்.