‘ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபம் செப்டம்பரில் நிறைவடையும்’
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், 6450 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னா் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நினைவு அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் வரும் செப்டம்பா் மாதம் நிறைவடையவுள்ளது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னா் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா்.இடம்தோ்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் தென்கிழக்கு மூலையில், செய்தி மக்கள் தொடா்புத் துறை மூலம் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.ரூ. 3.02 கோடி மதிப்பில் 6450 சதுரஅடி பரப்பளவில், மன்னா் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைக்கும் கண்ணாடிக் கதவுடன் கூடிய காட்சியகம், 530 நபா்கள் அமரும் வகையிலான கூட்ட அரங்கம், சிறப்பு விருந்தினா்கள் தங்கும் ஓய்வறை போன்றவையும் இந்த மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.
7 மாதகால ஒப்பந்தத்தில் நடைபெற்று வரும் இப்பணிகள் வரும் செப்டம்பா் மாதம் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தப் பணிகளை, மாநில இயற்கைவளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கட்டுமானப் பணிகளை தரத்துடன் குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு அவா்கள் அறிவுரை வழங்கினா். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாநகராட்சித் துணை மேயா் மு. லியாகத்அலி, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.