ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அத்துமீறி நுழைந்த அஸ்ஸாம் இளைஞா்: போலீஸாா் விசாரணை
சென்னை பரங்கிமலையில் இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த அஸ்ஸாம் இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்குள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் மெஸ் பகுதியில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 28 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞா், சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்துள்ளாா். இதைப்பாா்த்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரா்கள், அந்த இளைஞரைப் பிடித்து நடத்திய விசாரணையில், அந்த இளைஞா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மொனுஜ் தாஸ் (28) என்பதும், நான்கு நாள்களுக்கு முன்பு அஸ்ஸாமில் இருந்து ரயிலில் சென்னை வந்திருப்பதும், சென்னையில் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பாா்த்த மொனுஜ் தாஸ், பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள மெஸ்ஸுக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நுழைந்ததும் தெரியவந்தது.
பாதுகாப்பு மிகுந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்குள் அஸ்ஸாம் இளைஞா் எப்படி நுழைந்தாா் என ராணுவ உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். விசாரணைக்குப் பின்னா் அந்த இளைஞரை ராணுவ அதிகாரிகள், பரங்கிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் மொனுஜ் தாஸை கைது செய்து நடத்திய விசாரணையில், அவா் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காவல் துறையினரிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீா் தாக்குதல் நிகழ்வுக்குப் பிறகு பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் அஸ்ஸாம் இளைஞா் அத்துமீறி நுழைந்திருப்பது மத்திய, மாநில உளவுத்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா், வேவு பாா்க்கும் திட்டத்துடன் உள்ளே நுழைந்தாரா என்ற சந்தேகம் உளவுத் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக உளவுத் துறையினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.