மாநில அரசின் 'துணைவேந்தர் நியமன' அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த 3-4 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.
வடகர்நாடக - கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830 மணி அளவில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அதற்கடுத்த 36 மணி நேரத்தில் வலுவடையக் கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியிலிருந்து ஆந்திர கடலோர பகுதிகள் வரை ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மே 21 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே 22 முதல் 27 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
மே 21 முதல் 23 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னையில் எப்படி?
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி வெப்பநிலையும் இருக்கக்கூடும்.
மீனவர்கள்
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.