"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...
கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்
புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றியவா் பூஜா கேத்கா். குடிமைப் பணிகள் தோ்வில் மோசடியில் ஈடுபட்டு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பலன்களை பெற்றதாக அவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அளித்த புகாரின் அடிப்படையில், அவா் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, உச்சநீதிமன்றத்தில் பூஜா கேத்கா் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இவர் செய்த மிகக் கொடூரமான குற்றம்தான் என்ன? இவர் ஒன்றும் போதைப்பொருள் கடத்தல்காரரோ, பயங்கரவாதியோ அல்ல. இவர் கொலை எதுவும் செய்யவில்லை. தேச விரோதக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. உங்களிடம் ஒரு அமைப்போல் அல்லது மென்பொருளோ இருக்க வேண்டும். நீங்கள் விசாரணையை நிறைவு செய்யுங்கள். அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். இனி எங்கும் எந்த வேலையும் அவருக்குக் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.
தில்லி காவல்துறை மற்றும் யுபிஎஸ்சி நிர்வாகம் தரப்பில், பூஜா கேத்கருக்கு முன்பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, அவர் குடிமைப் பணி ஆணையத்தையும் மக்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்று வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், அவர் கொலை ஒன்றும் செய்யவில்லை. முன் பிணை வழங்குவதாக உத்தரவிட்டனர்.
முன்னதாக, முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது குடிமைப் பணி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு, எதிர்காலத்திலும் எந்தத் தேர்விலும் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ஐஏஎஸ் பதவியிலிருந்தும் அவர் நீக்கம் செய்யப்பட்டார்.
முறைகேட்டின் பின்னணி
வழக்கமான நடைமுறையின்படி, யுபிஎஸ்சி தோ்வை எழுதுவதற்கு பூஜா கேத்கா் 9 முறை அனுமதிக்கப்பட்டாா். ஆனால் தான் மாற்றுத்திறனாளி என்று போலி சான்றிதழ் தயாரித்து கூடுதலாக மேலும் சில முறை அவா் தோ்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றுள்ளார். பயிற்சி பெற்று வந்த நிலையில்தான், அவரது முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.