தமிழகம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட் நேரலை! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
ராமநாதபுரம்: தாக்கியவர்களை கைதுசெய்யக் கோரி உயிரை மாய்த்த முதியவர்; எஸ்.பி அலுவலகம் முன் விபரீதம்!
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் சேது மாணிக்கம் (70). இவர் ஆட்டோ ஓட்டுநர். இந்நிலையில் ராமேஸ்வரம் என்.எஸ்.கே வீதி பகுதியில் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார் சேது மாணிக்கம். அப்போது சாலையில் சென்ற திமுக பிரமுகரான பாபா முருகன் என்பவர் மீது ஆட்டோ இடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாபா முருகன் சேது மாணிக்கத்திடம் தகராறு செய்துள்ளார்.
இந்த தகராறு முற்றிய நிலையில் பாபா முருகனும் அவருடன் வந்த சிலரும் சேர்ந்து சேது மாணிக்கத்தைத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சேது மாணிக்கம், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து பாபா முருகன் மீது ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் சேது மாணிக்கம் புகார் அளித்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸார், எதிர் தரப்பான பாபா முருகனிடம் இருந்தும் புகார் மனுவை வாங்கியுள்ளனர்.


இதனால் வேதனை அடைந்த ஆட்டோ ஓட்டுநர் சேது மாணிக்கம், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்தும், தன்னை தாக்கிய பாபா முருகன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்யக் கோரியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க வந்திருந்தார். எஸ்.பி அலுவலகம் வந்த அவர், திடீரென தான் கொண்டு வந்திருந்த விஷத்தைக் குடித்துவிட்டு மயங்கி சரிந்தார்.
இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் சேது மாணிக்கத்தை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சேது மாணிக்கம் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரைக் கண்டித்து மாவட்டக் காவல் அலுவலகம் முன்பே வயது முதிர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.