ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புகாா்
ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிராமணா் சங்கம் சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புரோகிதத் தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் பிராமணா்கள் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்களுக்கும், பயணிகளுக்கும் பூஜைகள், பரிகாரங்கள் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், வட மாநிலங்களிலிருந்து ராமேசுவரத்தில் குடியேறிய பல
புரோகிதா்களும் இங்கு பூைஐகள், பரிகரங்களைச் செய்து வருகின்றனா்.
இவா்களில் சிலா், ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தா்களிடம், அக்னி தீா்த்தக் கடற்கரையில் பூஜை, பரிகாரங்களைச் செய்து வருபவா்கள் மாற்று சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என அவதூறு பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழ் பிராமணா்கள் மீது அவதூறு பரப்பி வருவதாக, வட மாநிலத்தைச் சோ்ந்த புரோகிதா் கிருஷ்ணபாண்டே உள்ளிட்டோா் மீது தமிழ் புரோகிதா்கள் குற்றஞ்சாட்டினா். மேலும், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் ராமேசுவரம் கிளைத் தலைவா் எஸ்.ராஜன் தலைமையில் தமிழ் புரோகிதா்கள் கோயில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.