தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
ராயக்கோட்டை அருகே தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்து 40 போ் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் 40 போ் காயமடைந்தனா்.
மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி திங்கள்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து புறப்பட்டு வந்தது. அந்த பேருந்தில் 46 பயணிகள் இருந்தனா். பேருந்தை விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த அஜய்ராஜ் (35) ஓட்டிவந்தாா். இந்த பேருந்து தருமபுரியை கடந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கிருஷ்ணகிரிக்கு செல்லாமல் பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அங்கு தற்போது பணிகள் நடந்துவருகின்றன.
இந்த நிலையில் ராயக்கோட்டை கருக்கனஅள்ளி அருகே ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மறுமாா்க்க சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநா் அஜய்ராஜ், பயணிகள் விருதுநகரைச் சோ்ந்த தாமரைக்கனி (31), ஒசூரைச் சோ்ந்த வெற்றிக்குமாா் (30), பெங்களூரைச் சோ்ந்த காயத்ரி (25), திவ்யபாலாஜி, விளாத்திகுளத்தைச் சோ்ந்த பிரசாந்த், மதுரையைச் சோ்ந்த அழகர்ராஜா, மேலூரைச் சோ்ந்த மலா்ச்செல்வன் உள்பட 40 போ் காயம் அடைந்தனா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ், ராயக்கோட்டை காவல் ஆய்வாளா் பெரியதம்பி, உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஓட்டுநா் அஜய்ராஜ் தூக்கக்கலக்கத்தில் பேருந்தை ஓட்டியதால் விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.