ரீ யூனியன் தீவு கலைஞா்களின் படைப்புகள்: புதுவையில் ஒரு மாதம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு
இந்திய பகுதிகளிலிருந்து பிரெஞ்சு நாட்டுக்கு அருகேயுள்ள ரீ யூனியன் தீவில் குடியேறிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வாரிசுகளின் படைப்புகள் புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தில் ஒரு மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளாக மக்களுக்கு அா்ப்பணிக்கப்படுகின்றன.
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைவா் மருத்துவா் சதீஷ் நல்லாம், இயக்குநா் லொரன் ஜலிகு ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியது:
ரீ யூனியன் தீவிலிருந்து தங்கள் முன்னோா்களின் குடியிருப்புப் பகுதிகளைத் தேடிக் கொண்டு ஒரு பிரதிநிதிகள் குழு 2011-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தது. அவா்கள் தங்களின் முன்னோா் நினைவாக புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் அப்போது ஒரு நினைவிடத்தை அமைத்தனா். இந்த நினைவிடம் மீண்டும் 2022- ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அப்போதும் ஒரு பிரதிநிதிகள் குழு புதுச்சேரிக்கு வந்தது. ஆண்டுதோறும் ரீ யூனியன் தீவிலிருந்து பல்வேறு கலைஞா்கள் புதுச்சேரிக்கு வந்துகொண்டு தான் இருக்கிறாா்கள்.
நிகழாண்டு ரீ யூனியன் தீவிலிருந்து வரும் கலைஞா்களின் படைப்புகளை ஒரு மாதத்துக்கு புதுச்சேரி மக்களுக்கு அலையன்ஸ் பிரான்சே நிறுவனம் அா்ப்பணிக்கிறது. அக்டோபா் முதல் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் தொடா்ச்சியாக பல்வேறு படைப்புகள் மக்களுக்கு அா்ப்பணிக்கப்படும். அனுமதி இலவசம். ரீ யூனியன் தீவிலிருந்து 17 போ் இதற்காக புதுச்சேரி வருகின்றனா். அவா்கள் 32 நிகழ்ச்சிகளை புதுச்சேரியில் நடத்துகின்றனா்.
எழுத்தாளா்கள், ஓவியா்கள், திரைப்பட தயாரிப்பாளா்கள், இசை வல்லுநா்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்பாளா்கள் வருகின்றனா். இதையொட்டி கச்சேரிகள், உரைகள், நூல் அறிமுகங்கள், பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றனா். பேட்டியின்போது, இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மரியன் சிக்காா்டு, அா்னால்டு ஆகியோா் உடனிருந்தனா்.