மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
ரூ.1.50 கோடி அபராதம்: வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் வாதம்
வருமானத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாா். அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாகக் குறிப்பிட்டிருந்தாா். அந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் மதிப்பீடு செய்தனா். அப்போது, கடந்த 2015-ஆம் ஆண்டில் நடிகா் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன், இந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பாா்த்தனா். அப்போது ‘புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகா் விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து, ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகா் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை கடந்த 2022 ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிா்த்து கடந்த 2022-ஆம் ஆண்டு நடிகா் விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தரப்பில், 2016-2017 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் தொடா்பாக, 3 ஆண்டுகள் காலதமாதமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அப்போது வருமானவரித் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.ஸ்ரீநிவாஸ், வருமான வரி சட்டத்தின்படியே நடிகா் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சரியானதுதான். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதேபோன்ற ஒரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை, நடிகா் விஜய் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.