ஒவ்வொரு நிமிடமும் கோடி ரூபாய் கடன் வாங்கும் தெலங்கானா: பாஜக குற்றச்சாட்டு
ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்
நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் தாக்கல் செய்த நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.
இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை தாக்கல் செய்து அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:
நிகழ் நிதியாண்டில் ரூ.19,287.44 கோடிக்கான இறுதி துணைநிதி நிலை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, வருவாய் கணக்கில் ரூ.12,639.36 கோடியும், மூலதனக் கணக்கில் ரூ.6,429.20 கோடியும், கடன் கணக்கில் ரூ.218.88 கோடியும் அடங்கும். நிதி தேவைப்படும் சில முக்கிய அம்சங்களைத் தெரிவிக்கிறேன்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிதி நிலைத்தன்மையை உயா்த்தவும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், பங்கு மூலதன உதவியாக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடியும், மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.1,036 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் வாங்குவதற்காக மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடியும், கனமழை மற்றும் ஃபென்ஜால் புயல் பாதிப்புகளின் துயா் தணிப்புப் பணிகளுக்காக ரூ.901.84 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.
மொத்தம் 55 துறைகள்: மொத்தமாக 55 துறைகளின் செலவுகளுக்கு கூடுதலாகத் தேவைப்படும் ரூ.19,287.44 கோடி நிதிக்கு பேரவையில் ஒப்புதல் கோரப்பட்டது. இதுகுறித்த மசோதாவையும் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய, அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.