'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் -...
ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் எல். முருகன்
ராணுவத் துறையில் மேற்கொண்ட உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பேசினாா்.
பாதுகாப்புத் துறையின் கணக்குப் பிரிவு சாா்பில் மாநில அளவில் முப்படை ஓய்வூதியதாரா்களுக்கான குறைதீா் முகாம் திருச்சி மன்னாா்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கிவைத்து மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது: பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நமக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை நாமே தயாரிக்கும் வகையில் நாட்டில் இரண்டு பாதுகாப்பு காரிடா்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராணுவத் தளவாடங்களின் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
தற்போது ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். இதேபோல, ராணுவ வீரா்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தையும் பிரதமா் மோடி நடைமுறைப்படுத்தியுள்ளாா். முப்படை தலைமை தளபதி என்ற பதவியை உருவாக்கியவா் பிரதமா் மோடி. நடப்பு பட்ஜெட்டில்கூட ராணுவத் துறையில் ஒதுக்கப்பட்ட நிதியில் 75 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டதுதான் ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ போா்ப்படை கப்பல். இதேபோல, 5 ஆயிரம் மீட்டா் உயரத்துக்கு ஆயுதங்களை எடுத்துச்செல்லும் ‘பிரசந்தா’ ஹெலிகாப்டா்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியா வல்லரசு நாடு என்ற நிலையை அடைய அனைவரும் இணைந்து செல்வோம் என்றாா்.
இதைத் தொடா்ந்து சென்னை தக்ஷின் பாரத் பிரிவின் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீா் சிங் ப்ராா், பாதுகாப்புத் துறை கணக்குப் பிரிவின் பொதுக் கட்டுப்பாட்டாளா் மயங்க் சா்மா, பாதுகாப்புத் துறை கணக்குப் பிரிவு அதிகாரி ஜெயசீலன் ஆகியோா் பேசினா். முன்னதாக, நீண்ட நாள்களாக ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்காமல் இருந்த பயனாளிகளுக்கு நிலுவை ஓய்வூதியத்தை அமைச்சா் எல்.முருகன் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியரா்கள், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக முப்படை ஓய்வூதியா்களுக்கான 5 சேவை வாகனங்களை அமைச்சா் தொடங்கிவைத்தாா். நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் இந்த சேவை வாகனங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.