சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி இல்லை: உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்
லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிய இயக்குநர் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் சமீபத்தில் நடந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்பனை செய்து மோனலினா போஸ்லே என்ற பெண் பிரபலம் அடைந்தார். அப்பெண் சமூக வலைத்தளத்தில் பிரபலம் அடைந்ததால், அவர் இப்போது சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் பிரபலம் அடைந்ததால் அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்புகள் கூட வந்தன. அவருக்கு சனோஜ் மிஸ்ரா என்ற இயக்குநர் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி இருந்தார். ஆனால் அதற்குள் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் புகார்
மும்பையில் நடிப்பு கேட்டு வந்த, 28 வயது பெண்ணிடம் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 4 ஆண்டுகளாக அப்பெண்ணுடன் லிவ் இன் உறவில் வாழ்ந்துள்ளார் என்பது அப்பெண் கொடுத்த புகார்.
இதனால் அப்பெண்ணை பல முறை கருக்கலைப்பு செய்யும்படி வற்புறுத்தியதுடன் அதனை செய்தும் உள்ளார் மிஸ்ரா. ஆனால் அதன் பிறகு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து மிஸ்ரா மீது அப்பெண் போலீஸில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் டெல்லி போலீஸார் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் முஜாபர்பூர் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்களையும் போலீஸார் பெற்றுள்ளனர்.
போலீஸார் வழக்கு பதிவு செய்தவுடன் மிஸ்ராவை கைது செய்ய அவரை தேடி வந்தனர். இதையடுத்து மிஸ்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து மிஸ்ரா எங்கிருக்கிறார் என்பதை அவரது மொபைல் போன் சிக்னல் மூலம் டெல்லி போலீஸார் கண்காணித்து வந்தனர். அவர் உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று மிஸ்ராவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். 45 வயதாகும் மிஸ்ரா மும்பையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரை கைது செய்ததன் மூலம் மிஸ்ராவிடமிருந்து மோனலிசா போஸ்லே தப்பித்து இருக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.