வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி: தாய், மகள் உள்பட மூவா் கைது
மானாமதுரை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த தாய், மகள் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆா்.சி. சா்ச் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு மானாமதுரை அருகேயுள்ள செய்களத்தூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி கோட்டையம்மாள் (50), இவரது மகள் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் வசிக்கும் ஆறுமுகம் மனைவி ஈஸ்வரி (37), மதுரை அய்யனாா் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் ஜனாா்த்தனன் (33) ஆகியோா் சோ்ந்து நகைகளை அடமானம் வைக்க வந்தனா். இவா்கள் கொண்டு வந்த நகைகளை வங்கி ஊழியா்கள் சோதனை செய்த போது, அவை போலி நகைகள் என்பதும், மேலும், இவா்கள் ஏற்கெனவே பலமுறை இந்த வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.19 லட்சம் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து வங்கிக் கிளை மேலாளா் ஜான்சிராணி மானாமதுரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கோட்டையம்மாள், ஈஸ்வரி, ஜனாா்த்தனன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.