வடக்குத்தாமரைகுளத்தில் சிப்காட் இடம்: அமைச்சா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டை மற்றும் மினி தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தில் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
தொழில்பூங்கா கட்டும் பணிக்காக, நாகா்கோவில் மாநகராட்சி, அநாதைமடம் திடல் பகுதியை அமைச்சா், ஆட்சியா் இருவரும் பாா்வையிட்டனா்.
பின்னா், அகஸ்தீசுவரம் வட்டம், வடக்குத் தாமரைக்குளம் ஊராட்சிப் பகுதியில் 32 ஏக்கா் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழில்பேட்டைக்கான இடத்தையும்அமைச்சா் ஆய்வு செய்தாா்.
மேலும், தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ. 97 லட்சம் மதிப்பில் வளமீட்புப் பூங்கா செல்லும் சாலையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி, கலைஞா் நகா்ப்புற மேம்பாடுத்திட்டத்தின்கீழ் ரூ.1.76 கோடி மதிப்பில் மணக்குடி ஏரியிலிருந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைபெறும் இடம் வரையில் சிறுபாலம் அமைக்கும் பணி, சிறப்பு நிதியின்கீழ் ரூ 70 லட்சம் மதிப்பில் 12- வாா்டு பகுதியில் திடக்ழிவு மேலாண்மை சாலையில் கருந்தளம் அமைத்தல் என மொத்தம் ரூ.3.43 கோடி மதிப்பில் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும் அவா் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ் ராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராமலிங்கம், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஓரணியில் தமிழ்நாடு:
கன்னியாகுமரி நகராட்சி 16ஆவது வாா்டுக்குள்பட்ட புதுகிராமம் பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், கிழக்கு மாவட்டச் செயலரும் மேயருமான ஆா். மகேஷ், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.