வன விலங்குகள் பட்டியலிலிருந்து காட்டுப் பன்றிகளை நீக்க எம்.பி. வலியுறுத்தல்
காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அருப்புக்கோட்டை பகுதிகளில் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மத்திய வனத் துறை அமைச்சரிடம் பேசி காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வலியுறுத்தப்படும்.
ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சட்டமேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது. அருப்புக்கோட்டை வழியாக செல்லும் சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்குவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றாா் அவா்.
அப்போது, காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா்கள் செல்வம், கிருஷ்ணமூா்த்தி, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி, கிழக்கு மாவட்ட செய்தித் தொடா்பாளா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.