முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மூலம் 77 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனா்: அமைச்சா்...
வயதான தம்பதியை பிணையக் கைதிகளாக பிடித்து கொள்ளை! 3 பேர் கைது!
உத்தரப் பிரதேசத்தில் வயதான தம்பதியை பிணையக் கைதிகளாக பிடித்து கொள்ளையடித்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராம்தாஸ் குப்தா (வயது 78) மற்றும் அவரது மனைவி சுமித்ரா குப்தா (75) . இவர்கள் இருவரும் கடந்த ஜன.7 அன்று இரவு அவர்களது வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி பிணையக் கைதிகளகாக பிடித்து அவர்களது வீட்டு பீரோவில் இருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்தனர்.
சுமார், 45 நிமிடங்களாக நடைபெற்ற இந்த கொள்ளையில் அவர்களது வீட்டில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து தப்பியோடிய கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் வீட்டின் உள்ளேயே வைத்து வெளிக்கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஒருவழியாக கதவை திறந்து வெளியே வந்த அந்த தம்பதி அவர்களது வீட்டு காவலாளியை சென்று பார்த்தபோது அவரை அந்த கொள்ளையர்கள் கட்டிப்போட்டு இருந்தது தெரியவந்தது. அந்த கயிற்றை அவிழ்த்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிக்க:ஜார்க்கண்ட்: ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயம்
முன்னதாக, அந்த கொள்ளையர்கள் அவர்களை மிரட்டி கொள்ளையடித்தபோது அவர்கள் வீட்டு வேலைக்காரரான சந்தன் என்பவரின் பெயரை உச்சரித்ததாகவும், அவரிடம் செல்போனில் பேசியதாகவும் அந்த தம்பதி புகார் அளித்தனர். இந்த கொள்ளை சம்பவம் நடப்பதற்கு ஒரு மணிநேரம் முன்னர்தான் சந்தன் அவர்கள் வீட்டிலிருந்து சென்றதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.10) அந்த தம்பதியின் வீட்டில் வேலை செய்து வந்த சந்தன் (20) மற்றும் அவரது கூட்டாளிகளான ஓம் பிரகாஷ் (20) சுனில் குமார் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியான ரூ.10.5 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள அம்மாநில காவல் துறையினர் மீதமுள்ள நகையையும் பணத்தையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.