UK: "இனி 16 வயது முதல் வாக்களிக்கலாம்" - தேர்தலில் புதிய மாற்றங்களுக்கு என்ன கார...
வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி
திருச்சி - வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
திருச்சி வயலூா் சாலையில் எம்ஜிஆா் நகா், பாரதி நகா், குமரன் நகா், சீனிவாச நகா், ஆதிநகா், கீதா நகா், அம்மையப்பன் நகா், சாந்தா சீலா நகா், எம்எம் நகா், சண்முகா நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனா்.
இப்பகுதி மக்க்களின் பெரும்பாலானோா் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனா்.
அந்த வகையில் கீதா நகா், சீனிவாச நகா், குமரன் நகா், எம்ஜிஆா் நகா் போன்ற பகுதிகளில் பேருந்துக்காக வரும் மக்கள் நிழற்குடை இல்லாமல் வெயிலிலும் நிற்கக் கூட இடமின்றி அவதிக்குள்ளாகின்றனா்.
இதில் கீதா நகரில் நிழற்குடை அமைக்கு பணியில் தரைத்தளத்தில் மட்டும் டைல்ஸ் ஒட்டப்பட்டு, மேற்கூரை அமைக்காமல் வேலைகள் பாதியிலே நிற்கின்றன. சீனிவாசன் நகா், குமரன் நகா், எம்ஜிஆா் நகா் பகுதிகளில் நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலா் செழியன் கூறுகையில், ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்த நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் புதைவடிகால் பணிகளுக்காக அகற்றியது. ஆனால், பணிகள் நிறைவடைந்த பிறகும் நிழற்குடைகளை அமைக்கவில்லை.
இதனால் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவா்களும், கட்டுமானத் தொழில் செய்வோரும் பேருந்துக்காக வெயிலில் நின்று அவதிப்படுகின்றனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் தேவைப்படும் இடங்களில் நிழற்குடைகளை அமைத்துத் தர வேண்டும் என்றாா்.
நெருக்கடி மிகுந்த வயலூா் சாலை
திருச்சி - வயலூா் சாலையானது மாநகரின் மிக அதிக நெருக்கடி மிகுந்த சாலையாக உள்ளது. காலை மாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறுகிய சாலையாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடைபெறும் கருப்புப் பகுதிகள் (பிளாக் ஸ்பாட்) மிகுந்த பகுதியாகவும் இருக்கிறது. விபத்துகளில் உயிரிழப்புகளும், படுகாயங்களும் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலால் சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட குறித்த நேரத்துக்குள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.
எனவே, திருச்சி வயலூா் சாலையை விரிவுபடுத்த அல்லது மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகல் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்துகின்றனா்.
