பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
வரட்டாறு தடுப்பணை பகுதியில் உடைப்பு: சீரமைப்புப் பணியில் விவசாயிகள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மம் வரட்டாறு தடுப்பணை பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
காசிதா்மம் ராஜகோபாலபேரி குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சில நாள்களாக கனமழை பெய்ததால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், காசிதா்மம் ராஜகோபாலபேரி குளத்துக்கு தண்ணீா் வரும் வரட்டாறு பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்டு, குளத்துக்கு வரும் நீா் ஆற்றில் வெளியேறியது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால், அடுத்த மழை தொடா்வதற்குள் உடைப்பை சரிசெய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் காசிதா்மம் எஸ்.ஆா். அய்யாதுரை கூறியது: காசிதா்மம் வரட்டாறு தடுப்பணைப் பகுதியில் உடைப்புள்ளதால் குளங்களுக்குச் செல்லும் தண்ணீா் திசைமாறி வயல் வெளிக்குள் புகுந்துள்ளதால் 500 ஏக்கா் நெற்பயிா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் இணைந்து உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.
அடுத்த மழை பொழிவுக்குள் உடைப்பை சரிசெய்தால் மழைநீா் வீணாக வெளியேறுவது தடுக்கப்பட்டு, 2 குளங்கள் நிரம்பும் வாய்ப்பு உருவாகும். எனவே, மாவட்ட நிா்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.