Gangaikonda Cholapuram Temple History | கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உருவான வரலாறு...
வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறையும், பலன்களும்!
வரலட்சுமி விரதம் இந்தாண்டு ஆகஸ்ட் 08-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம், பௌர்ணமி, திருவோண நட்சத்திரம் அனைத்தும் ஒன்றாக வருவது மிகவும் விசேஷமானது.
தீர்க்க சுமங்கலியாக வாழப் பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.
வரலட்சுமி விரதத்தின் புராணக் கதை
சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா. செல்வ வளத்தின் மமதையால் மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

வரலட்சுமி விரதத்தை யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். குறிப்பாக அந்தந்த வீட்டில் இருக்கும் சுமங்கலி பெண்கள் இதைக் கடைப்பிடிக்கலாம். திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
வரலட்சுமி விரதத்தின்போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். பூஜை முடிந்ததும் அன்றைய நாள் இரவு அம்மனுக்கு ஆலம் (குங்கும நீரில் வெற்றிலை வைத்து கற்பூரம் ஏற்றுதல்) கரைப்பது முக்கியம். கண்திருஷ்டி நீங்குவதாக ஐதீகம்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
சாஸ்திர முறைப்படி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்திரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யலாம்.

பூஜைக்குத் தேவையானவை
மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்திரம், கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.
நிவேதனப் பொருள்கள்
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.
பழ வகைகள்
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை

பூஜைக்கான முன்னேற்பாடுகள்
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைக் கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.
பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு (ராகு காலத்துக்கு முன்) கலசம் வைக்கத் தொடங்க வேண்டும். (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப்படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாகப் பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்திலிருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும்.
மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரைப் பூஜித்து பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.
வரலட்சுமி விரத நாளில் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனதார பிரார்த்தனை செய்து அனைத்து விதமான நலன்களையும் பெறுவோம்.
பலன்கள்
குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும்.
ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும்.
மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும்.
கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
கணவன் - மனைவி இடையே மனக் கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.
பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.