செய்திகள் :

வரலாற்றுச் சிறப்புமிக்க காதல் காவியங்கள்..!

post image

உலகமே எதிர்த்து நின்றாலும் காதலும், காதல் காவியங்களும் எப்போதும் அழியாதவை. ஒவ்வொருவரது வாழ்விலும் திருப்புமுனையாக அமைவது காதல்தான். அது சிலரது வாழ்க்கையை உச்சத்துக்குக் கொண்டு செல்லும், ஒரு சிலரது வாழ்வை மோசமான நிலைக்குத் தள்ளிவிடும். அது அவரவர் தேர்ந்தெடுக்கும் நபர்களைப் பொறுத்து அமையும்.

வரலாற்றில் பல காதல் கதைகளை ஆராய்ந்துப் பார்த்தால் காதலில் களம் கண்டு வெற்றி பெற்றவர்களும் உள்ளனர், அதே வேளையில் காதலால் நாடு, நகரங்களை இழந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். உண்மையான காதலுக்கு வலியும் ஆழமும் அதிகமாம். அதனால்தான் என்னவோ இரும்பு இதயத்தையும் உருக வைக்கும் சக்தி காதலைத் தவிர வேறு எந்த உணர்வுக்கும் இல்லை என்கிறார்கள்.

காலங்களைக் கடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காதல் கதைகள்..

பாரிஸ் - ஹெலனில் காதல்

கிரேக்கப் புராணங்களின்படி, பாரிஸுக்கும் ஹெலனுக்கும் இடையிலான காதல் டிராய் நகரம் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. ஹேரா, ஆதினா மற்றும் அஃப்ரோடைட் ஆகிய மூன்று பெண் தெய்வங்களில் யார் சிறந்தவர் என்பதை ட்ரோஜன் இளவரசர் பாரீஸ் தேர்வு செய்வதிலிருந்து இந்தக் கதை தொடங்குகிறது. இளவரசர் பாரிஸ், அஃப்ரோடைட் என்ற பெண் தெய்வத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் பதிலுக்கு அவள் உலகின் மிக அழகான பெண்ணான ஹெலன் பற்றிக் கூறுவதாக உறுதியளித்தாள். சொன்ன வார்த்தையை காப்பாற்றினார் அஃப்ரோடைட்.

ஸ்பார்டா நகரில் வாழும் அழகான பெண் ஹெலன் பற்றி பாரிஸ் தெரிந்துகொண்டான். ஆனால் அதற்கு முன்னதாகவே ஹெலனுக்கு மன்னர் மெனலாவுடன் திருமணம் முடிந்திருந்தது. இருப்பினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸ் ஸ்பார்டாவுக்குச் சென்று ஹெலனை சந்தித்தான். இளவரசர் பாரிஸின் பேச்சு ஹெலனை மிகவும் கவர்ந்தது. இருவரும் தனிமையில் சந்திக்கத் தொடங்கினர். அப்போது இருவருக்குமிடையே அழகான காதல் மலர்ந்தது. சில நாள்களுக்குப் பிறகு இளவரசர் பாரிஸ் ஹெலனை டிராய்க்கு அழைத்துச் சென்றான். இதனால், ஆத்திரமடைந்த மன்னர், மனைவி ஹெலனுக்காக டிராய் நகரை முற்றுகையிட்டார். ஸ்பார்டாவுக்கும் டிராய்க்கும் இடையே போர் மூண்டது. என்னவனாலும் பாரிஸுடன்தான் வாழ்வேன் என்று ஹெலன் கூற, பாரிஸ் போர்க்களத்தில் களமிறங்கினான். ஆனால், துரதிருஷ்டவசமாக பாரிஸ் உயிரிழந்தார். ஒரு அழகான பெண்ணுக்காக டிராய் நகரமே மண்ணோடு மண்ணானது. பலர் உயிரிழந்தனர். ஹெலன் சிறைபிடிக்கப்பட்டு மீண்டும் ஸ்பார்டாவுக்குத் தன் கணவருடன் திரும்பினாள். பாரிஸின் மீது ஹெலனின் இணைபிரியாத காதலின் விளைவால் டிராய் நகரமே அழிந்தது. காதலால் சாம்ராஜ்யமே அழிந்த காதல் கதைகளில் இதுவும் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றது.

ஆர்ஃபியஸ் - யூரிடிஸ்

பண்டைய கிரேக்கக் கால நாயகன் ஆர்ஃபியஸ். தனது அழகான இசையால் மனிதர்களை மட்டுமல்லாது கற்கள், பாறைகள், விலங்குகளையும் கவர்ந்திழுப்பவர். இவர் யூரிடிஸ் என்ற அழகான பெண்ணுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டார். ஒருநாள் யூரிடிஸ் வனதேவதைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆடு மேய்ப்பவர் ஒருவர் கெட்ட நோக்கத்துடன் அவரை பின்தொடர்ந்தார். ஓடத்தொடங்கிய யூரிடஸை பாம்பு கடித்ததில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காதல் மனைவி பிரிந்தது தாளமுடியாத சோகத்தைத் தந்தது ஆர்ஃபியஸுக்கு. மகனின் சோகத்தைத் தாங்கமுடியாமல் தந்தை அப்பல்லோ ஒரு ஆலோசனை கூறினார், பாதாள லோகத்திற்குச் சென்று உன் மனைவியை அழைத்துவா என்றார். அது எப்படி முடியும், உயிருடன் இருப்பவர்கள் பாதாள லோகத்திற்குச் செல்ல அனுமதியில்லையே என்றார்.

ஆனால், தந்தை சொல்படி, ஆர்ஃபியஸ் தன்னுடைய இசையால் தெய்வங்களைக் கவர்ந்து பாதாள உலகத்துக்குச் சென்றார். பாதாள லோகத்தின் காவல் தெய்வதையும் தன் இசையால் கவர்ந்த நிலையில், ஆர்பியஸுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டனர். தன் காதல் மனைவி யூரிடைஸை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றான். ஆனால், அதேசமயம் பாதாள லோகத்தில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. யூரிடஸ் உன் பின்னால் வருவாள், ஆனால் பாதாள உலகிலிருந்து தப்பிக்கும் வரை திரும்பிப் பார்க்கக்கூடாது. அவ்வாறே ஆகட்டும் என்று கூறி நடக்கத் தொடங்கிய ஆர்ஃபியஸ், மேல் உலகின் நுழைவாயிலை அடையச் சிறிது தொலைவே இருந்த நிலையில் யூரிடிஸ் வருவதற்கான எந்த சப்தமும் இல்லையே கடவுள் நம்மை ஏமாற்றுகிறாரா என்று சந்தேகித்து ஆர்ஃபியஸ் திரும்பிப்பார்க்க, தன் பின்னே நிழல் போல பின்தொடர்ந்து வந்த யூரிடிஸ், அதன்பிறகு பாதாள உலகிற்குச் சென்று மறைந்தாள். தன் மனைவி மீதுள்ள அதீதக் காதலைத்தான் இந்த கதை வெளிப்படுத்துகிறது.

கிளியோபாட்ரா - மார்க் ஆண்டனி

உலகில் எத்தனையோ அழகிகள் இருந்தாலும், இன்றளவும் மக்கள் மனதில் சிம்மாசனமிட்டும் பல வயதினரும் தேடி தேடிப் படித்த ஒருவர்தான் பேரழகி கிளியோபாட்ரா. தனது 18 வயதில் எகிப்து ராணியாக அரியணை ஏறியவர். தனது அழகினை பாதுகாப்பதில் அதிகளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். எகிப்தின் பேரழகி கிளியோபாட்ராவிற்கும் மார்க் ஆண்டனிக்கும் இடையிலான காதல் அவர்களின் சோகமான வரலாற்று முடிவுக்கு வழிவகுத்தது. மார்க் ஆண்டனி ஆக்டேவியன் என்ற மன்னரின் தங்கையைத் திருமணம் செய்திருந்தார். ஆனாலும் அனைத்திலும் சிறந்து விளங்கும் கிளியோபாட்ராவின் மீது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதையறிந்த ஆக்டேவியன் கோபமடைந்து மார்க் ஆண்டனியைப் பழிவாங்கும் நோக்கில் எகிப்து மீது படையெடுத்தார். இந்த புரட்சி போரில் மார்க் ஆண்டனி படுதோல்வியடைந்தார். போர்க்களத்தில் கிளியோபாட்ரா இறந்துவிட்டதாகப் பொய்யான செவிவழி செய்தி வருகிறது.

மனம் உடைந்த ஆண்டனி அந்த கனமே தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார். உயிர் பிரியும் தறுவாயில் கிளியோபாட்ரா உயிருடன் இருப்பது தெரியவந்து, அவளுடைய காலில் விழுந்து இறக்கிறான் மார்க் ஆண்டனி. கண் முன்னே தன் காதலன் உயிர் பிரிவதைக் கண்டு மனம் வருந்தி, கிளியோபாட்ரா தன்னுடைய அறைக்குச் சென்று கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்றைக் கடிக்கவைத்து இறந்துபோனார். கிளியோபாட்ரா மற்றும் மார்க் ஆண்டனி இருவரின் உடலும் ஒன்றாகப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிளியோபாட்ரா இன்றளவும் புகழ்பெற்றவராக இருக்க அவருடைய அழகு மட்டுமல்ல காதலும் காரணம்.

ரோமியோ - ஜூலியட்

காதல் கதையென்றாலே நம் நினைவுக்கு வருவதும், இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த இதிகாச காதல் ஜோடி ரோமியோ ஜூலியட்தான். இத்தாலிய நகரமான வெரோணா என்ற இடத்தில் காப்ளர் என்ற அரசனின் மகள்தான் ஜூலியட். அவரின் பரம எதிரி மாண்டேகுவின் ஒரே மகன் ரோமியோ. ஒருநாள் ஜூலியட் வீட்டில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரோமியோ முகத்தை மூடியபடி ஜூலியட்டின் கையைப் பிடித்து நடனம் ஆடினான். இருவரிடையே காதல் மலர்ந்தது. கையை பிடித்தவனின் முகத்தைக் காணமுடியாத ஏக்கம் ஒருபக்கம் இருக்க, ஜூலியட்டை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று ரோமியோ மறுபக்கம் ஏங்க, மறுநாள் விடிந்தது. ஒருவழியாக ரோமியோ ஜூலியட்டை சந்தித்து தன்னுடைய காதலைக் கூறினான். ஜூலியட், ரோமியோவின் காதலை ஏற்றுக்கொண்டாள். இருவரும் இரவுதோறும் சந்தித்து வந்தனர். சிறிது காலம் கழிந்தது. பாதிரியார் லாரன்ஸ் என்பவரின் துணையோடு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த செய்தி ஒற்றன் ஒருவனின் மூலமாக ஜூலியட்டின் தந்தையின் காதுகளுக்குச் செல்ல, பூகம்பம் வெடித்தது. ரோமியோ நாடுகடத்தப்பட்டான். ஜூலியட் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, பாரிஸ் என்பவருடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. பாதிரியாரிடம் உதவி கோரினார் ஜூலியட். இரண்டு நாள்கள் மட்டுமே சடலமாக இருப்பதுபோன்ற விசேஷ விஷம் ஒன்றைத் தயார் செய்துகொடுத்து அருந்தும்படி சொன்னார் பாதிரியார். அவ்வாறே செய்தாள் ஜூலியட். திருமணம் நின்றது. ஆனால் நண்பன் ஒருவனிடமிருந்து ஜூலியட் இறந்த செய்தியைக் கேட்டுத் தாங்கமுடியாமல், ஜூலியட் வைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்று தன் கையிலிருந்த விஷத்தை அருந்தி இறந்துபோனான் ரோமியோ. சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஜூலியட் ரோமியோவைப் பார்த்துக் கதறி அழுதாள். அருகிலிருந்த கத்தி ஒன்றை எடுத்து தன் நெஞ்சை குத்திக் கிழித்துக்கொண்டு இறந்தாள் ஜூலியட். இந்த உண்மையான காதலர்கள் சொர்க்கத்தில்தான் ஒன்றுசேர்ந்தனர்.

ஷாஜகான் - மும்தாஜ்

தாஜ்மஹால் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது ஷாஜகான் - மும்தாஜின் அழகான காதல்தான். ஷாஜகான் முதன்முறையாக ஆக்ரா கோட்டையின் புகழ்பெற்ற மீனா பஜாரில் அழகு பதுமையான மும்தாஜை சந்தித்தார். அன்று முதல் காதல் வயப்பட்ட இளவரசர் உறக்கமில்லாமல் தவிக்க, அந்தப் பெண் யாரென விசாரித்து தெரிந்துகொண்டார். ஒருவரையொருவர் சந்தித்து காதலைப் பரிமாறும்போது இவர்களின் வயது 15. காதல் பெருகி 5 வருட முடிவில் ஷாஜகான்-மும்தாஜ் திருமணப் பந்தத்தில் இணைந்தனர். சுமார் 19 வருடத் திருமண வாழ்வில் ஷாஜகான் பேரரசராக இருந்த ஆட்சிக் காலத்தில், அரசு உத்தரவுகள் உள்பட அனைத்திலும் மும்தாஜ் ஒரு நிழல்போல ஷாஜகானைப் பின்தொடர்ந்தாள். இவர்களின் காதல் வாழ்க்கையின் பரிசாக மும்தாஜ் 13 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கான்- இ - ஜஹான் லோடி என்ற மன்னர் ஷாஜகானை எதிர்த்து கிளர்ச்சி செய்ய இருவருக்குமிடையே தாக்குதல் நடைபெற்றது. அந்தநேரத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் மும்தாஜ். கிட்டத்தட்ட 35 மணி நேரம் பிரசவ வலிக்குப் பிறகு, மரணத்தின் கடைசி விளிம்பில் இருப்பதை உணர்ந்தாள் மும்தாஜ்.

அந்த நேரத்தில் தன் கணவரைச் சந்தித்து ஒருசில கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்தார். நம் காதலை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க வேண்டும் என்பதே அது.

14-வது குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு இறந்துவிடுகிறாள் மும்தாஜ். காதல் மனைவிக்காக ஆக்ரா கோட்டையிலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் தாஜ்மஹாலை கட்டி முடித்து மும்தாஜின் உடல் மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு ஷாஜகான் நோய்வாய்ப்பட்டு இறந்துபோன நிலையில், அவரது உடலும் தாஜ்மஹாலின் மும்தாஜ் மஹாலுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. ஷாஜகானுக்கு எத்தனையோ மனைவிகள் இருந்தாலும், தனது முதல் காதல் மனைவியின் மீது கொண்ட அதீத அன்புதான் தாஜ்மஹால் உருவாகக் காரணமாக இருந்தது. உலகிலேயே காதல் மனைவிக்காகக் கட்டப்பட்ட ஒரே பிரம்மாண்ட மஹாலும் இதுதான்.

நெப்போலியன் - ஜோசஃபின்

பிரான்ஸ் ராணுவ பிரிவில் தளபதியாக இருந்தவர் நெப்போலியன். ராணுவ உயர் அதிகாரியான பாரஸ் என்பவரிடம் ஏற்பட்ட நட்பால், அவரின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்குதான் மேரி ஜோசப் ரோஸ் என்ற பெண்ணைச் சந்தித்தார் நெப்போலியன். அவளின் பேச்சு நெப்போலியனை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்த சில நாள்களிலேயே இவருக்குமிடையே காதல் மலர்ந்தது. நெப்போலியன் அவரது பெயரைச் சுருக்கி செல்லமாக ஜோசஃபின் என்று அழைத்தார். சில நாள்களுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று நெப்போலியன் கேட்க, அந்த விஷயத்திற்குப் பின்வாங்கிய ஜோசஃபின் அன்றிரவே பாரஸை சந்தித்தார்.

இந்த இடத்தில்தான் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது நெப்போலியனுக்கு. ஜோசஃபினுக்கு ஏற்கனவே திருமணமானதும், அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதையும் அறிந்தார். கணவரின் மரணத்திற்குப் பிறகு பாரஸ் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தார். இதற்கு மேல் தன்னால் அடைக்கலம் கொடுக்க முடியாது. நெப்போலியனை திருமணம் செய்ய நிர்ப்பந்தமும் செய்தார் பாரஸ். திருமணமாகியிருந்தாலும் தன் காதலுக்காக 32 வயதான ஜோசஃபினை 26 வயதான நெப்போலியன் திருமணம் செய்துகொள்கிறார். திருமணம் முடிந்து தன்வீட்டாருடன் மனைவி ஜோசஃபினை விட்டு இத்தாலி சென்றுவிட்டான். ஜோசஃபினை பொறுத்தவரை லாபநோக்கத்துக்காக செய்துகொண்ட திருமணமாகவே அவள் கருதினாள்.

நெப்போலியனின் காதலை அவள் புரிந்துகொள்ளவில்லை. 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஜோசஃபினுக்கு குழந்தை இல்லாததை குடும்பத்தினர் சுட்டிக்காட்ட, அனைவரின் வாயையடைக்கும் அளவிற்கு நெப்போலியன் அதற்குத் தக்கப் பதில் கூறினான். ஜோசஃபினுக்குப் பிறந்தவர்களும் என் வாரிசுதான், அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை என் வாரிசாக ஏற்றுக்கொள்கிறேன் என்ற நெப்போலியனின் பதில் ஜோசஃபினின் மனதை மொத்தமாக மாற்றியது. பின்னர்தான் நெப்போலியனின் காதலைப் புரிந்துகொண்டாள். அங்குதான் திருப்புமுனையாக.. நெப்போலியன் இத்தாலியில் இருந்தபோது ஜோசஃபினுக்கும் மற்றொரு அதிகாரிக்கும் இருந்த தொடர்பை அறிந்துகொண்டார். தன் காதலுக்குத் துரோகம் செய்த ஜோசஃபினை பழிவாங்க முடிவு செய்த நெப்போலியன், கட்டுப்பாடுகளை தகர்த்துப் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டான்.

அதன்பின்னர், தனது தந்திரத்தால் பிரான்ஸ் நாட்டுக்கு அரசனும் ஆனான். மற்ற யாரையும் அரசியாக அறிவிக்க மனமில்லாத நெப்போலியன், ஜோசஃபினை அரசியாக்கினான். வாரிசாக அறிவித்த குழந்தை நோய்வாய்ப்பட்டு இறக்கவே, தனக்கு வாரிசு வேண்டுமென்பதால் வேறு வழியின்றி ஜோசஃபினை விவகாரத்து செய்து, இரண்டாவது திருமணம் செய்துகொண்டான் நெப்போலியன். குழந்தைகளும் பிறந்தன. அதேசமயம் சூழ்ச்சியின் காரணத்தால் நெப்போலியனின் பதவியும் பறிபோனது. நெப்போலியனின் நினைவாக வாழ்ந்த ஜோசஃபின் இறந்துபோனார். அடுத்த சில நாள்களில் நெப்போலியனும் புற்றுநோய் ஏற்பட்டு இறந்துபோனான். நெப்போலியன் கடைசி மூச்சுவரை காதலித்தது ஜோசஃபினை மட்டும்தான் என்று அவரது மரணப்படுக்கையில் நெப்போலியன் கூறினான். இந்த உலகத்திலேயே மிகவும் கொடூரமானது என்னவென்றால் உண்மையான காதலுக்குச் செய்யும் துரோகமே என்பதே நெப்போலியன் ஜோசஃபினின் கதை உணர்த்துகிறது.

லைலா - மஜ்னு

வாசனைத் திரவியங்களுக்கும், பேரீச்சை மரங்களுக்கும் பெயர்போன நாடுதான் அரபு நாடு. அங்கிருந்த செல்வந்தரின் மகள் தான் லைலா அல் அமீரா. லைலாவின் பாடசாலையில் படித்த மாணவர்களில் ஒருவன் கேசவன் அல் முல்லப்பா. இருவரும் ஒரே பாடசாலையில் படிக்கத் தினமும் லைலாவை சந்தித்த முல்லப்பா, லைலாவின் கண்கள் ஏதோ தன்னிடம் கூற விரும்புவதாகவும், அதை நேரில் கேட்கமுடியாத சூழ்நிலையும் அவனுக்கு ஏற்பட்டது. லைலாவை நினைத்து கவிதைகள் எழுத ஆரம்பித்தான். எந்த நேரமும் கவிதை எழுதிவந்த அவனை, அவனது தோழர்கள் மஜ்னு என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர். மஜ்னு என்றால் கிறுக்கன் என்று அர்த்தம். ஒருகட்டத்தில் மஜ்னுவின் காதல் கவிதைகளை லைலா வாசிக்க, அவன் மீது அவளுக்கு இனம்புரியாத ஈர்ப்பும், காதலும் ஏற்பட்டது.

இருவரும் ஒருவரையொருவர் காதலை பரிமாறிக்கொள்ளக் காதலிக்கத் தொடங்கினர். லைலாவை பெண் கேட்டுச் சென்றான் மஜ்னு. ஆனால் எந்த வேலையும் இல்லாத மஜ்னுவுக்கு பெண் தர மறுத்துவிட்டார் லைலாவின் தந்தை. ஊர் முழுவதும் அவனை மஜ்னு என்று அழைக்கத் தொடங்கினர். பின்னர் தந்தையின் நிர்பந்தத்தின்பேரில் அல்கஃபி என்ற வியாபாரியை லைலா திருமணம் செய்து இராக் சென்றாள். காதலியைப் பிரிந்து உடைந்துபோன மஜ்னு முன்பைவிட அதிகமாகக் கவிதைகளை எழுத தொடங்கினான். ஒரு சில நாள்களுக்குப் பிறகு ஊரை விட்டு பாலைவனம் சென்ற மஜ்னு உண்மையாகவே ஒரு பைத்தியக்காரன் போலவே காட்சியளித்தான். மறுபக்கம் லைலா மஜ்னுவை பிரிந்த சோகத்தில் உணவு எடுத்துக்கொள்ளாமல் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். சொந்த நாட்டிற்கு கொண்டுவந்து லைலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விஷயத்தை மஜ்னுவிடம் தெரிவிக்க அவரது நண்பர்கள் அவனைத் தேடினர். ஆனால் மஜ்னு எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு வருடம் கழித்து லைலாவின் கல்லறைக்குச் சென்றபோது, அங்குக் கவிதைகள் கிறுக்கப்பட்ட நிலையில் அருகில் காய்ந்துபோன ஒரு உடல் இருந்தது. அது வேறு யாருமல்ல மஜ்னுதான். அந்தக் கவிதையில் நான் சுவர்களை முத்தமிடவில்லை, அதனுள் இருக்கும் என் இதயத்தை முத்தமிடுகிறேன் என்று எழுதியிருந்தான். இதுவே லைலா மஜ்னுவின் உண்மையான காதல் காவியம்.

அம்பிகாபதி - அமராவதி

சோழ நாட்டின் மன்னன் குலோத்துங்க சோழனின் மகள் அமராவதி. கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பரின் மகன் அம்பிகாபதி. ஒருநாள் அமராவதி மேல்மாடத்தில் நின்று அரண்மனைக்குக் கீழே நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்குச் சுருண்ட கேசமும், அகண்ட மார்பும் கொண்ட ஒரு வீரனை, தன்மையும் மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் அமராவதி. அந்த இளைஞனும் அமராவதியை நோக்கினான். அவளை வர்ணித்து ஒரு பாடலும் பாடினான் அம்பிகாபதி. இருவரின் பார்வையிலேயே காதல் மலரத் தொடங்கியது. ஆனால் இருவருக்கும் தெரியாது, இந்தக் காட்சியைக் கீழ் மாடத்திலிருந்து தந்தை குலோத்துங்கனும் பார்த்துக்கொண்டிருந்தார்.

அதன்பின்னர் இருவருக்குமிடையே நிகழும் ரகசிய சந்திப்பு ஒற்றன் ஒருவனின் மூலம் மன்னர் தெரிந்துகொண்டார். ஒருநாள் அம்பிகாபதியின் தந்தையான கம்பரை அழைத்து குலோத்துங்க சோழன் தன் மகளுக்கும் உங்கள் மகனுக்கு இருப்பது காதல் அல்ல வெறும் மோகம், ஒருபோதும் என் மகளை உங்கள் மகனுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். மேலும், அம்பிகாபதி ஒரு கவிஞன். வர்ணித்துப் பாடுவது என்பது கவிஞருக்கு ஒன்றும் புதியதல்ல என்றும் கூறினார். சரி, இதை நிரூபிக்க அம்பிகாபதிக்கு ஒரு போட்டி நடத்தப்படும். அதில் அவன் வென்றால் இருவருக்கும் திருமணம். தோற்றால் அம்பிகாபதியின் தலை துண்டிக்கப்படும் என்று மன்னர் கூறினார்.

அந்தப் போட்டிக்குக் கம்பர் சம்மதம் தெரிவித்தார். ஆனால், அந்தப் போட்டியில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அம்பிகாபதி காதல், இல்லறத்தைத் தவிர்த்து 100 பாடல்களைப் பாட வேண்டும், பாடல் பாடும் அம்பிகாபதியே பாடலின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க வேண்டும். போட்டிக்குத் தயாரான அம்பிகாபதியிடம், கவலைப்படவேண்டாம், ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பூவை வலமிருந்து இடமாக வைப்பதாகச் சொல்லி தோழியிடம் தூது அனுப்பினாள் அமராவதி. போட்டி நாளும் வந்தது மன்னர் சொன்னபடி 100 பாடல்களும் பாடி முடித்தான் அம்பிகாபதி. ஆனால் 101-வது பாடலாக அமராவதியின் அழகை அப்பட்டமாக வர்ணித்துப் பாடினான். உடனே ஒட்டக்கூத்தர் எழுந்து அம்பிகாபதி போட்டியில் நீ தோற்றுவிட்டதாக கூறினார்.

100 பாடல்கள் முடிவடைந்துவிட்டதே என அவையே ஆச்சரியத்தில் மூழ்க, அதற்கு ஒட்டக்கூத்தர் முதல் பாடல் எப்போதுமே கடவுளுக்குப் பாடப்படும் காப்பு செய்யுள் அது பாடலாகக் கணக்கெடுக்க முடியாது. கூனிக்குறுகி நின்றான் அம்பிகாபதி. சொன்னபடியே அம்பிகாபதியின் தலை மன்னரால் துண்டிக்கப்பட்டது. கொலைக் களத்திற்கு வரும் அமராவதி, அம்பிகாபதியின் தலை துண்டிக்கப்பட்டதைக் கண்டு, இவன் மீது நான் வைத்திருந்த காதல் உண்மையெனில் இவன் உயிர் பிரியும் முன்பே என் உயிர் பிரியட்டும் என்று அழுது மன்றாடுகிறாள். அந்த கணமே அவளின் உயிரும் பிரிந்தது. ஒரு சிறிய அவசர முடிவால் இருவரின் காதல் கைகூடாமல் போனது.. அதனுடன் உயிரும் போனது. காதலில் பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் காதல் கதை உணர்த்துகிறது.

இப்படி மானுட வரலாறு துவங்கிய காலத்திலிருந்தே காதல் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. எல்லாரும் அம்பிகாபதி - அமராவதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுகொடுக்கும் மனப்பான்மையில் ஒருவரின் சுதந்திரத்தை மற்றொருவர் கெடுக்காமல் நல்ல வாழ்விணையர்களாக இருக்க முயற்சிப்போம் என்பதே இந்த காதலர் தின செய்தி.

பிரபலங்களின் காதல் திருமணம்!

நடிகர் அஜித் குமார் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா வரிசையில் லேட்டஸ்ட்டாக பல திரையுலகப் பிரபலங்கள் திருமண வாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.திருமணம் என்றாலே கொண்டாட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கும். அதிலும் காதல... மேலும் பார்க்க

காதல் வருவது எப்படி?

அந்த இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அது வெறும் சொற்றொடர் அல்ல. உண்மையிலேயே, இரண்டு பேர் காதலை உணரும்போது, இருவருக்குள்ளும் நிகழும் உண்மையான வேதியியல் மாற்றத்தைத... மேலும் பார்க்க

பிக் பாஸில் மலர்ந்த காதல்கள்!

காதலர்களுக்கு ஏதுங்க தினம்? தினம் தினம் காதலர் தினம்தான் என்று காதலர்கள் சொல்லலாம். ஆனால், காதலை வெளிப்படுத்தவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் ஒரு நாள் என்பதால் உலகம் முழுவதும் இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்... மேலும் பார்க்க

2,738 ரோஜாக்கள்.. ஈபிள் கோபுரம்..! பாரீஸ் ஒலிம்பிக்கில் பற்றிய காதல் சுடர்!

காதல் என்பது ஏதோ அந்நிய உணர்வாக பலரும் நினைத்துக்கொண்டிருந்தாலும், அது சாமானியர் முதல் சாதனையாளர்கள் வரை அனைவரையும் உரசிச் சென்று அவர்களது வாழ்வில் ஒரு புது அத்தியாயத்தை எழுதத்தான் செய்கிறது.இரண்டு பே... மேலும் பார்க்க