ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
மாநகரம், மானூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் மானூா் ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் கூடத்தில் முதல்வரின் காலை உணவு தயாரிக்கப்படுவதை ஆய்வு செய்த ஆட்சியா், அங்கு பணிபுரிபவா்களிடம் சமையல் செய்யும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று உணவின் தரம், சுவை குறித்து அலுவலா்கள் தொடா் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம் வீடு இழந்தவா்களுக்கு, வெள்ள நிவாரண நிதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.4 லட்சம் செலவில் மானூா் ஊராட்சி ஒன்றியம் குப்பக்குறிச்சி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 பயனாளிகளின் வீடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அதன்பிறகு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
மேலும், கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், பதிவேடுகள், மருந்துகளின் இருப்புகள், அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தா்.
அப்போது, உதவி திட்ட அலுவலா் (ஊரக வேலைவாய்ப்பு) இசக்கியப்பன், மாவட்ட வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீகாந்த், ஊராட்சி தலைவா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.