கௌரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை மீது நடவடிக்கை: அமைச்சா் கோவி. செழியன்
தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகத்தை மாற்றி அமைக்க கால அவகாசம்: உயா்நீதிமன்றம்
மதுரை பீ.பீ. குளம் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகக் கட்டடத்தை தொழில்நுட்ப முறையில் மாற்றி அமைக்க 2 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ரவீந்திரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை பீ.பீ. குளம் கண்மாயை ஒட்டிய பகுதியில் முல்லைநகா் உள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி சாா்பில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் பீ.பீ. குளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. இந்தப் பகுதியில் திமுக கட்சி அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அமைந்துள்ள இடம் மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமானது. இதற்காக மாநகராட்சிக்கு முறையாக தற்போது வரை வரி செலுத்தப்படுகிறது. எனவே, திமுக அலுவலகக் கட்டடத்தை இடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மனுதாரா் தரப்பு கட்சி அலுவலகக் கட்டடத்தை தாங்களே இடித்து விடுவதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தனா்.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகக் கட்டடத்தை பட்டா நிலத்தில் மாற்றி அமைக்க 2 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திமுக கட்சி அலுவலகக் கட்டத்தை மாற்றி அமைக்க 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. மீண்டும் கால அவகாசம் வழங்கப்படாது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.