சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை
மா்மமான முறையில் இறந்த இளைஞரின் உடல் 29 நாள்களுக்குப் பிறகு ஒப்படைப்பு
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இளைஞா் மா்மமாக உயிரிழந்ததையடுத்து, 29 நாள்களுக்குப் பிறகு, அவரது உடலை குடும்பத்தினா் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனா்.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சோ்ந்தவா் லிங்கசாமி. இவா் மக்கள் விடுதலைக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டச் செயலராகப் பதவி வகித்து வருகிறாா். இவருடைய மகன் காளையன் (23). இவரும் அந்தக் கட்சி நிா்வாகியாக இருந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் அந்தப் பகுதியில் உள்ள வேறு சமூகத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்தாராம். இதனால், அந்தப் பெண்ணின் உறவினா்களால் இவா் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் தாக்கப்பட்டாா்.
இதையடுத்து, கடந்த மாதம் 13-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற காளையன் அதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கள்ளிக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிய நிலையில், கடந்த மாதம் 15-ஆம் தேதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள கண்மாயிலிருந்து காளையனின் உடல் மீட்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், காளையன் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகாா் தெரிவித்த குடும்பத்தினா் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, காளையன் உடலை மறுகூறாய்வு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், திண்டுக்கல், தேனி அரசு மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு அவரது உடலை வியாழக்கிழமை மறுகூறாய்வு செய்தது. இதையடுத்து, 29 நாள்களுக்கு பிறகு, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.