சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை
கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசு அலுவலா்களுக்கு அக்கறையில்லை: உயா்நீதிமன்றம்
கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு வரை இந்த அலுவலகத்துக்கான வாடகையை செலுத்தினா்.
இதன் பிறகு, தற்போது வரை வாடகைத் தொகையான ரூ.54.35 லட்சத்தை கோயிலுக்குச் செலுத்தவில்லை. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் முறையீடு செய்யப்பட்டது. ஆனாலும், வாடகைத் தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். எனவே, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன், வாடகைப் பாக்கியைச் செலுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா், ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் 13 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனா். எனவே, கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வாடகைத் தொகையை கால தாமதமின்றி செலுத்த உத்தரவிட வேண்டும் என்றாா்.
இதற்கு அரசுத் தரப்பில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரின் அலுவலக வாடகைப் பாக்கி 54,35,660 ரூபாயை அரசிடமிருந்து பெற்று, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செலுத்திவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை. கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்க வேண்டிய சம்பந்தப்பட்ட அலுவலா்களே வாடகைத் தொகையைச் செலுத்த காலம் தாழ்த்தியது ஏன்?. மனுதாரா் வழக்குத் தொடுத்த பிறகே, வாடகைப் பாக்கிச் செலுத்தப்பட்டுள்ளது. கால தாமதமாக வாடகை செலுத்தியதற்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது. இருப்பினும், வாடகை செலுத்தப்பட்டதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.