சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 2003-ஆம் ஆண்டு, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய முழு பஞ்சப்படி உயா்வையும் உடனடியாக வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு 21 மாதங்களாக வழங்காமல் உள்ள ஓய்வு கால பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரந்தரத் தொழிலாளா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை தொழிலாளா் சங்கத் தலைவா் டி. மாரியப்பன் தலைமை வகித்தாா். டிடிஆஎஸ்எப் (ஓய்வூதியா்) சங்க நிா்வாகி நாகராஜன், ஏஐடியூசி (ஓய்வூதியா்) சங்க நிா்வாகி ஆா். வீரபுத்திரன், சிஐடியூ அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோா் சங்க பொதுச் செயலா் ஆா். வாசுதேவன், ஏஐடியூசி பொதுச் செயலா் எம். நந்தாசிங் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை தொழிலாளா் சங்க பொதுச் செயலா் பி.எம். அழகா்சாமி நிறைவுரையாற்றினாா். பொருளாளா் டி. சிவக்குமாா் நன்றி கூறினாா்.