நெல்லையில் இரு விபத்துகள்: 2 போ் பலி
திருநெல்வேலியில் வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள சிவராஜபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சண்முகவடிவு (60). இவா், திருநெல்வேலி ரிலையன்ஸ் சந்திப்பு அருகே புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சண்முகவடிவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
காயமுற்றவா்: திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடியைச் சோ்ந்தவா் முருகன் (50). இவா், தனது உறவினருடன் பைக்கில் கடந்த 9 ஆம் தேதி திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் முருகன் பலத்த காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இரு விபத்துகள் குறித்தும் திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.