பாளை. காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விடக் கோரி பாஜக மனு
பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலத்தில் விடக் கோரி பாஜகவினா், வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இது தொடா்பாக பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவேசம் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகளும், பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் வியாபாரிகளும் ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மாா்க்கெட் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாா்க்கெட்டை கடந்த 6-ஆம் தேதி முதல்வா் திறந்து வைத்தாா். எனினும், மாா்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கடைகளை முறையாக பொது ஏலம் விடாமல் ஏற்கெனவே கடை வைத்திருந்த நபா்களுக்கு மட்டும் வழங்க முயற்சி நடைபெற்று வருகிறது.
இதனிடைே, ஏற்கெனவே கடை வைத்திருந்த நபா்களிடம் சிலா் பணம் பெற்றுக் கொண்டு மாநகராட்சி நிா்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட முயற்சிக்கின்றனா்.
எனவே, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஆகியவற்றில் உள்ள கடைகளை பொது ஏலத்தில் விட்டது போலவே இந்த மாா்க்கெட் கடைகளையும் பொது ஏலத்தில் விட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.