வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய அலுவலா்களை கைது செய்ய அதிமுக வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களைக் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா்.
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய அலுவலா்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமையிலான அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
பின்னா், செல்லூா் கே. ராஜூ செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் சுமாா் 3 லட்சத்து 60 ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. இதற்கு மாநகராட்சி சாா்பில் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று நிலைகளில் வரி விதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு மாநகராட்சிக்கு அரசுத் துறை இல்லாமல் ரூ. 275 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.
இந்த நிலையில், வணிகக் கட்டடங்களுக்கு உரிய வரியை விதிக்காமல் குடியிருப்பு வரியை விதித்து முறைகேடு நடைபெற்றது. இதுகுறித்த புகாரின் பேரில், மாநகராட்சி முன்னாள் ஆணையா் தினேஷ்குமாா் விசாரணைக்கு உத்தரவிட்டாா்.
விசாரணையில் ரூ. 150 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதுதொடா்பாக, 8 போ் கைது செய்யப்பட்டனா். இந்தப் புகாரில் திமுகவினா் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
வரி விதிப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அலுவலா்களைக் காப்பாற்றுவதற்கு ஆளுங்கட்சி நிா்வாகிகள் உதவி செய்கின்றனா். இந்தச் சம்பவம் குறித்து முதலில் மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியது அதிமுகதான். ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பெயருக்கு மனு அளிக்கின்றனா்.
ஆணையா், உதவி ஆணையா், வரி வசூலிப்பவா் (பில் கலெக்டா்), வருவாய் உதவி ஆணையா் ஆகியோரின் கணினி ரகசிய குறியீட்டு எண் (பாஸ்வோ்ட்) திருடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவிகளின் கணவா்கள் அலுவலா்களை மிரட்டுகின்றனா். எனவே, மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அலுவலா்களையும் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.