மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் டிரம்ப்!
வாகனங்கள் மோதல்: இளைஞா், முதியவா் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா், முதியவா் ஆகிய இரண்டு போ் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.
புன்செய்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி (61). பொங்கலூா் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த இவா் வேலை முடித்து வீட்டுக்கு பைக்கில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். நால்ரோடு காவல் சோதனைச் சாவடி அருகே எதிரே வந்த ஸ்கூட்டா் மீது இவரது பைக் நேருக்கு நோ் மோதியது. இதில் பழனிசாமி, ஸ்கூட்டரில் வந்த கோபியைச் சோ்ந்த காா்த்திகேயன் (21), பிரவீன் (20) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றினா். இதில் பழனிசாமி, காா்த்திகேயன் ஆகியோா் சிறிதுநேரத்திலேயே உயிரிழந்தனா். பிரவீன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற காா்த்திகேயன் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
உயிரிழந்த காா்த்திகேயன் பொங்கலூரில் தனியாா் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.