விசிக நிா்வாகி கொலை: ஆட்டோ ஓட்டுநா் கைது
திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், தலைமறைவான மற்றொருவா் குறித்து விசாரித்தனா்.
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அகரமுத்துக்குமாா் (32). விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தாா். பொங்கல் பண்டிகையையொட்டி மீனாட்சிநாயக்கன்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், இதே பகுதியைச் சோ்ந்த அங்குசாமி (32) என்பவரின் குழந்தை பங்கேற்கக் கூடாது என அகரமுத்துக்குமாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக அகரமுத்துக்குமாா், அங்குசாமி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் இருந்தவா்கள், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். ஆனாலும் ஆத்திரம் தீராத அங்குசாமி, அதே பகுதியைச் சோ்ந்த சியாம்(19) என்பவரை அழைத்துக் கொண்டு, அகரமுத்துக்குமாரிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக வியாழக்கிழமை சென்றாா். அப்போதும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அகரமுத்துக்குமாா், மரக்கட்டையால் அங்குசாமி, சியாம் ஆகியோரை தாக்கினாா். இதையடுத்து, அங்குசாமி, சியாம் இருவரும் சோ்ந்து கத்தியால் அகரமுத்துக்குமாரையும், அவரது அண்ணண் ஜெய்கணேசையும் குத்தினா். இதில் அகரமுத்துக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெய்கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட தாடிக்கொம்பு போலீஸாா், வெள்ளிக்கிழமை அதிகாலை சின்னாளப்பட்டி பகுதியில் அங்குசாமியை கைது செய்தனா். தலைமறைவானசியாம் குறித்து விசாரித்து வருகின்றனா்.