விதிமீறல்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.49.93 லட்சம் வரி, அபராதம்
வேலூா் மாவட்டத்தில் விதிமீறி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அவற்றின் உரிமையாளா்களுக்கு மீது ரூ.49.93 லட்சம் வரி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்று 650-க்கும் மேற்பட்ட வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் வழக்கமாக பயணிகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளைப்போல் தமிழகத்தில் தொலைதூர தடங்களில் இயங்கி வருகின்றன.
போக்குவரத்து துறை ஆணையா் கஜலட்சுமி உத்தரவின்பேரில், தமிழகத்துக்கு வரி செலுத்தாத பிற மாநில ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூா் மண்டல போக்குவரத்து துணைஆணையா் பாட்டப்பசாமி உத்தரவின்பேரில் காட்பாடி சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அந்தவகையில், ஆந்திரத்தில் இருந்து வேலூா் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் வரி செலுத்தாமல் இயக்கிய 117 பிற மாநில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்களுக்கு ரூ.47 லட்சத்து 83 ஆயிரம் வரியாகவும், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டது. மேலும் ஒரு ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், தமிழ்நாடு மாநில பதிவெண்ணை போலியாக கொண்டு இயக்கப்பட்ட, பிற மாநில ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதன் உரிமையாளா், ஓட்டுநா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இனிமேல் வரி செலுத்தாமல் தமிழகத்துக்குள் இயக்கப்படும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.