இலவச கண் சிகிச்சை முகாம்: நூற்றுக்கணக்கானோா் பரிசோதனை
காட்பாடியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனா்.
வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், சிஎம்சி கண் மருத்துவமனை, மாரநாதா ஜெப கூடுகை, காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை காட்பாடி ரெட் கிராஸ் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தின.
முகாமுக்கு எம்.ஆல்பா்ட் வேதநாயகம் தலைமை வகித்தாா். மாநகராட்சி முதலாவது மண்டல குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினா் ஜி.சாமுண்டீஸ்வரி குணாளன் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா்.
முகாம் ஒருங்கிணைப்பாளா் எஸ்.ரபிராஜன் வரவேற்றாா். காட்பாடி ரெட் கிராஸ் அவைத்தலைவா் முனைவா் செ.நா.ஜனாா்த்தனன், முன்னாள் கவுன்சிலா் பா.குணாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஎம்சி கண் மருத்துவமனையின் முகாம் மேலாளா் ஜான் ஹிட்லா் குழுவினா் கண் பரிசோதனைகளை செய்தனா்.
இதில், நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனா். முகாமில் கண்ணுக்குள் லென்ஸ் பொருத்துதல், கண்ணில் நீா் வடிதல் முதலிய மருத்துவத்துக்கு குறைந்த கட்டணத்தில் வேலூா் சிஎம்சி கண்மருத்துவமைனையில் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.
காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவை துணைத் தலைவா் ஆா்.விஜயகுமாரி பொருளாளா் வி.பழனி மருத்துவக்குழு தலைவா் டாக்டா் வி.தீனபந்து செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.ராதாகிருஷ்ணன், ஆனந்தகுமாா், சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் அகஸ்தியன் நன்றி கூறினாா்.