தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு
வேலூா் அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேலூா் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (22), கட்டட மேஸ்திரி. இவா்கள் இருவருக்கும் ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இவா்களது பெற்றோா் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் சிறுமி கா்ப்பமடைந்ததை அடுத்து மனைவியை சூா்யா சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவருக்கு 18 வயது பூா்த்தியடைய வில்லை என்பதை உறுதி செய்தனா். உடனடியாக இதுகுறித்து மருத்துவா்கள் பாகாயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய சூா்யா மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.