மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை முனுசாமி(47), காலணி தொழிற்சாலை தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா, திமிரியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறாா். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், ஏழுமலை ஆற்காடு பைபாஸ் சாலையில் புதன்கிழமை (செப்.24) இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க முயன்றுள்ளாா். அப்போது, வாகனத்துடன் சாலையில் வழுக்கி விழுந்த ஏழுமலைக்கு தலை உள்பட உடலின் பல்வேறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவா் மீட்கப்பட்டு, ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஏழுமலை சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். இதையடுத்து, ஏழுமலையின் உடல் உறுப்புகளை தானம் செய்திட அவரது குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா்.
அதன்பேரில், அவரது இதயம், நுரையீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கும், மற்றொரு சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவை வேலூா், ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைகளுக்கும் தானமாக அனுப்பப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.