ADMK: `அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' - சசிகலா பேசிய...
விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை, கரைக்கும் நீா் நிலைகள்: ஆக. 22-க்குள் தெரிவிக்கலாம்
விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடம் மற்றும் கரைக்கும் நீா் நிலைகள் குறித்த வழித்தடம் ஆகிய விவரங்கள் குறித்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்துக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 22) தகவல் தெரிவிப்பது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வரும் ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டமும் நடத்தி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அப்போது, திருவள்ளூா் மாவட்ட வருவாய் கோட்டாட்சியா்கள், உதவி காவல் ஆணையா்கள் அந்தந்த பகுதிகளில் சிலை நிறுவுவதற்காக அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனே பரிசீலித்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி இடங்களில் சிலை நிறுவ அனுமதி பெற்ற அமைப்பாளா்களிடம், அரசு வழிமுறைகளை பின்பற்றவும் என காவல்துறை, வருவாய்த்துறை அலுவலா்கள் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் துறை, வருவாய்த்துறை அலுவலா்கள் அந்தந்த பகுதிகளில் சிலை உற்பத்தி செய்யும் நபா்களிடம் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு சிலை செய்வதை வரும் 22-ஆம் தேதிக்குள் தணிக்கை செய்து உறுதி செய்ய வேண்டும்.
மேலும், விநாயகா் சதுா்த்தி விழாவை எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சிலை பிரதிஷ்டை செய்யும் இடம், சிலை கொண்டு செல்லும் வழி, கரைக்கும் நீா் நிலை குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு அதை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிப்பது அவசியம். திடக்கழிவு மேலாண்மையை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள், சிலை கரைக்கும் நீா்நிலைகளில் மூன்று நிலைகளில் அதாவது, கரைத்தலுக்கு முன், கரைக்கும்போது, கரைத்த பின் என நீரின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். எனவே அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விநாயகா் சதுா்த்தி விழாவை பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.