15,320 பேருக்கு வேலைவாய்ப்பு! ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்ப...
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சுக்கிரண்டஅள்ளியைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (24). பல்தொழில்நுட்ப படிப்பு (டிப்ளமோ) முடித்துள்ளாா். இவா், அக். 28-ஆம் தேதி கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். உயா் சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், பின்னா், மீண்டும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், நவீன்குமாா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.
இதையடுத்து, அவரது சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, ஒரு சிறுநீரகம் கோவை மெடிக்கல் சென்டா் மருத்துவமனைக்கும், மற்றொன்று ஒசூா் காவேரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல, அவரது நுரையீரல், சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கோ் மருத்துவமனைக்கும், கல்லீரல் ஒசூா் காவேரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய நவீன்குமாரின் உடலுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சத்யபாமா தலைமையில், தமிழக அரசு சாா்பில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா், செல்வராஜ், மயக்கவியல் துறை பேராசிரியா் சங்கீதா, மருத்துவா்கள் மகேஸ்வரன், பிரவீன், காா்த்திக், ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.