தீப்பிடித்து எரிந்த சரக்குப் பெட்டக லாரி: போக்குவரத்து பாதிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புணே நோக்கி சென்ற சரக்குப் பெட்டக லாரி தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக புணேவுக்கு மருத்துவமனை தளவாடப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்குப் பெட்டக லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது.
கிருஷ்ணகிரி ஆஞ்சனேயா் கோயில் மேம்பாலம் அருகே சென்றபோது, லாரியின் வலதுபுற பின்பக்க டயா் வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சரக்குப் பெட்டக லாரியில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்தி, தீ, மேலும் பரவாமல் தடுத்தனா்.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று போக்குவரத்தை சீா்படுத்தினா்.
இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநா் பிகாா் மாநிலம், கயாவைச் சோ்ந்த பிஸ்சா பிரசாத் (45) அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி அருகே, சாலையோரமாக நிறுத்தி ஓட்டுநா் சமைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில் லாரி சேதமடைந்தது. இந்த இரு விபத்துகளிலும் சிக்கிய லாரி ஓட்டுநா்கள் பிகாா் மாநிலம், கயா மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாவா்.