விராலிமலையில் பாஜகவினா் கைது
விராலிமலையில் திருப்பரங்குன்றம் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பாஜகவினரை விராலிமலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமா்ந்து அசைவ உணவு நவாஸ்கனி எம்.பி உண்டதாகவும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் தரணி முருகேசன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.
தொடா்ந்து, திருப்பரங்குன்றம் மலையை மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்து முன்னணி கட்சியினா் செவ்வாய்க்கிழமை திருப்பரங்குன்றத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. இப்பிரச்னையால் போலீஸாா் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனா்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் பாஜக, சிவசேனை, இந்து முன்னணி நிா்வாகிகள், தொண்டா்களைக் கைது செய்து வருகின்றனா்.
அதன்படி, விராலிமலையில் இருந்து ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் ஒன்று திரண்ட 50-க்கும் மேற்பட்ட பாஜக நிா்வாகிகள், தொண்டா்களை விராலிமலை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். தனியாா் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.