வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
விருதுநகரில் போலி சுங்கத்துறை அதிகாரி கைது- மோசடிக்கு வலையா? போலீஸ் விசாரணை
விருதுநகர் தனியார் லாட்ஜில் சுங்கத்துறை அதிகாரி என பொய் சொல்லி ரூம் எடுத்து தங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் புல்லலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ் கனி. இவர் ராமமூர்த்தி சாலையில் உள்ள ஜீவா லாட்ஜில் வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். சுழற்சி முறையில் தினசரி இரவு 9 மணிக்கு பணிக்கு வரும் அனிஷ்கனி மறுநாள் காலை 9 மணிக்கு வீட்டுக்குச் செல்வது வழக்கம். இந்தநிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் சின்னதடாகம் பகுதியைச் சேர்ந்த ராமு (வயது 42) என்பவர் ஜீவா லாட்ஜூக்கு ரூம் எடுத்து தங்குவதற்கு வந்துள்ளார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் தான் உதவி வருவாய் அலுவலராக சுங்கத்துறையில் பணியாற்றுவதாகவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு வேலை இருப்பதால் லாட்ஜில் ரூம் வேண்டும் என கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட அனிஷ்கனி, ராமுவின் ஆதார் நகலை மட்டும் பெற்றுக்கொண்டு லாட்ஜில் ரூம் ஒதுக்கி கொடுத்துள்ளார். அப்போது ரூம் வாடகையாக 448 ரூபாயை ராமு செலுத்தியுள்ளார். அதன்பின், நவம்பர் தொடர்ந்து டிசம்பர் வரை 4 முறை லாட்ஜூக்கு வந்து தங்கிச்சென்றவர், ஒருமுறை கூட செட்டில்மெண்ட் செய்யாமல் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று மீண்டும் லாட்ஜூக்கு வந்தபோது அனீஸ்கனி அவரிடம் ரூம் வாடகை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமு, 'தான் ஒரு அரசு அதிகாரி என்று தெரிந்தும் கூட என்னிடம் வாடகை கேட்பாயா?, உன்னை கொன்றுவிடுவேன்' எனக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. ராமுவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அனிஷ்கனி, இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் லாட்ஜுக்கு வந்த போலீசார் ராமுவிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸின் விசாரணையில், ராமு சுங்கத்துறை அதிகாரி என பொய் சொல்லி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் தன்னை அரசு அதிகாரியாக காட்டிக்கொள்வதற்கு போலியான அடையாள அட்டைகளை தயார் செய்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அனீஸ் கனி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். அவர், எதற்காக விருதுநகர் வந்தார். சுங்கத்துறை அதிகாரி என்ற பெயரில் ஏதேனும் மோசடியில் ஈடுபட்டாரா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.