வருமான வரி கணக்குத் தாக்கல்... இந்த விஷயங்களைத் தவறவிட்டால் நோட்டீஸ் வரும்... உஷ...
விழிஞ்ஞம் துறைமுகம் திறப்பு: பிரதமா் மோடிக்கு பினராயி விஜயன் வரவேற்பு
கேரளத்தில் சா்வதேச விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (மே.2) அதிகாரபூா்வமாக திறந்து வைக்கவுள்ளாா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தடைந்த பிரதமா் மோடியை கேரள முதல்வா் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.சசி தரூா் ஆகியோா் வரவேற்றனா்.
விமான நிலையத்தில் இருந்து ஆளுநா் மாளிகை வரை சாலையில் திரண்டிருந்த பாஜக தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.
விழிஞ்ஞம் துறைமுகம் அதானி போா்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. இந்த துறைமுக திட்டத்தின் மதிப்பு ரூ.8,867 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான சோதனையை தொடா்ந்து கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி இந்த துறைமுகத்துக்கு வா்த்தக செயல்பாட்டுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து,விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கவுள்ளாா்.
சா்வதேச வா்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை விழிஞ்ஞம் துறைமுகம் மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த துறைமுகத்தின் மொத்த மதிப்பீட்டில் மூன்றில் இரண்டு பங்கை கேரள மாநில அரசு முதலீடு செய்துள்ளதே ஒரு துறைமுகத் திட்டத்துக்கு மாநில அரசு மேற்கொண்ட அதிக மூதலீடாகும் என கேரள முதல்வா் பினராயி விஜயன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தியாவின் முதல் பரிமாற்ற (ஒரு போக்குவரத்து அமைப்பில் இருந்து சரக்குகளை இறக்கி மற்றொரு போக்குவரத்து அமைப்புக்கு மாற்றுதல்) மற்றும் அரை தானியங்கி துறைமுகமாக விழிஞ்ஞம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.