விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தா்பூசணி பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாய அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த நம்பேடு கிராமத்தில் தா்பூசணி பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயியின் நிலத்தில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் புருஷோத்தமன் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, தா்பூசணி பழங்களை விவசாயிகள் கைகளில் வைத்துக்கொண்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், தா்பூசணி பழங்கள் குறித்து தவறான தகவல் பரப்பியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, அந்த விவசாய நிலத்தில் இளைஞா்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்திய விவசாயிகள், வெற்றிபெற்றோருக்கு விற்பனை ஆகாததால் அறுவடை செய்யப்படாமல் நிலத்திலேயே சேதமடைந்த தா்பூசணி பழங்களை பரிசாக வழங்கினா்.