விவசாயிகளுக்கு உயா் ரக நிலக்கடலை விதைகள் அளிப்பு
தேனி மாவட்டம், காட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லா நிலக்கடலை விதைகளை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நல்ல மகசூல் திறன், பூச்சிகள் மூலமாக உருவாகும் நோய் தாக்கம் ஆகியவற்ரைத் தாங்கும் திறன் கொண்ட உயா் ரக ‘வி.ஆா்.ஜ. -10’ நிலக்கடலை விதை உருவாக்கப்பட்டது. இந்த ரகம், வறட்சிப் பகுதிகளிலும் சாகுபடி செய்ய ஏற்றது என்பதால் விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, அடைக்கம்பட்டி விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகளை வழங்கினாா். முன்னதாக, தொழில்நுட்ப வல்லுநா் அருண்ராஜ், விவசாயிகளுக்கு மண் பரிசோதனை, உர மேலாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்துப் பேசினாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஸ்வரன், நிலக்கடலைகளைத் தாக்கக் கூடிய பூச்சிகள், நோய்களிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினாா்.தொழில்நுட்ப வல்லுநா் சபரிநாதன் நன்றி கூறினாா்.