ஆறுகளில் 3 லட்சம் நாட்டு இன மீன் குஞ்சுகள் வளா்ப்பு
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, சுருளியாறு ஆகியவற்றில் மீன் வளத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை, மொத்தம் 3 லட்சம் நாட்டு இன மீன் குஞ்சுகள் வளா்ப்புக்காக விடப்பட்டன.
வீரபாண்டி, முல்லைப் பெரியாற்றில் மீன் குஞ்சுகளை விடும் பணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் கூறியதாவது:
ஆறுகளில் உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும், நாட்டின மீன்களை பாதுகாக்கவும் நாட்டு இன நன்னீா் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற்றில் 60 ஆயிரம் மீன் குஞ்சுகள், சுருளியாற்றில் 2.40 லட்சம் மீன் குஞ்சுகள் என மொத்தம் 3 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்ப்புக்காக விடப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மீன் வளத்துறை உதவி இயக்குநா் செளந்தரபாண்டியன், மீனவா் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினா் முருகன், வீரபாண்டி பேரூராட்சித் தலைவி கீதா சசி, செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.