விவசாயிகளுக்கு நிலக்கடலை மதிப்புக்கூட்டுப் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான நிலக்கடலை மதிப்புக்கூட்டு சங்கிலித் தொகுப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சமையல் எண்ணெய்கான எண்ணெய் வித்துக்கள் இயக்க திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு
வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி தலைமை வகித்தாா்.
மேலும், விவசாயிகளுக்கு நிலக்கடலை விவசாயம் தொடங்கி, அதனை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களான எண்ணெய், மிட்டாய், பாகு, கடலை மாவு, வோ்க்கடலை வெண்ணெய் போன்ற தயாரிப்பு வரை உள்ள அனைத்து நிலைகள் குறித்த விழிப்புணா்வு மற்றும் திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக, நிலக்கடலை வளா்ப்பு மற்றும் எண்ணெய் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து, சேத்துப்பட்டு வட்டாரத்தில் 500 ஹெக்டோ் தோ்வு செய்து, வரும் இரவை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
மேலும், வேளாண்மை அறிவியல் நிலைய அறிஞா்கள் பூச்சி நோய் தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளித்தனா்.
துணை வேளாண்மை அலுவலா் பாபு, உதவி வேளாண்மை அலுவலா்கள் செந்தில், பாஸ்கா், ஜெயராமன் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப அலுவலா் சேகா், உதவி தொழில்நுட்ப அலுவலா் ஆனந்த், விஐடி மாணவா்கள், 30 விவசாயிகள் மற்றும் அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.