விவசாயிகள் குறை தீா் கூட்டம்: தனியாா் காப்பீட்டு நிறுவனம் மீது விவசாயிகள் புகாா்
நாகையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தனியாா் காப்பீட்டு நிறுவனம் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காமல் மோசடி செய்வதாக குற்றஞ்சாட்டி பேசினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சரபோஜி: நாகை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பச்சைப்பயிறு மற்றும் உளுந்து பயிறுக்கான நிவாரணம் வழங்கவேண்டும். கூட்டுறவு கடனாக ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகி எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன்: வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள சூழலில் இதற்கான முன்னேற்பாடுகளையும் வடிகால் வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும். மாவட்டத்தில் குறுவை சாகுபடி ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஈரப்பதம் பாா்க்காமல் விவசாயிகள் பாதிக்காத வகையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு முன்கூட்டியே மத்திய அரசிடம் ஈரப்பதம் குறித்து உரிய அனுமதி பெற வேண்டும்.
தலைஞாயிறு பி. கமல்ராம்: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்குவதில் தொடா்ந்து ஏற்படும் தாமதத்தை சரிசெய்ய வேண்டும். கடந்த சம்பா சாகுபடி பாதிப்புக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறை திட்டங்கள் தலைஞாயிறு பகுதிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
திருக்குவளை ஆா்.ஜி. பாஸ்கரன்: விவசாயிகளுக்கு வீடு கட்டுவதற்காக, வீட்டு வசதி கடன் சங்கத்தின் மூலம் 1989 முதல் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டில் இருந்து வீட்டுக் கடன் வழங்கப்படவில்லை. இதில் 2000 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கடன் தொகையை விட ஆறு மடங்கு அபராத வட்டியாக வளா்ந்துள்ளது. எனவே அசல் கடன் மற்றும் வட்டியை மட்டும் பெற்றுக்கொண்டு அபதார வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைஞாயிறு முருகானந்தம்: தலைஞாயிறு பகுதியில் 2024-25 ஆம் ஆண்டில் விளைச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்தாம்சேத்தி, உம்பளாச்சேரி உள்ளிட்ட ஏழு கிராமங்களுக்கு தேசிய பயிா்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை இதுவரை வழங்கவில்லை பயிா்க்காப்பீட்டு திட்டத்தை ஏற்று நடத்தும் தனியாா் நிறுவனம் விவசாயிகளை மோசடி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
வேட்டைக்காரணிருப்பு எம்.எஸ்.முஜீபுசரீக்: துளசியாப்பட்டினத்தில் இயங்கி வரும் பகுதிநேர நியாய விலைக் கடை மூலம்398 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா். 105 குடும்ப அட்டைதாரா்கள் இங்கிருந்து வண்டுவாஞ்சேரி கடைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளதால் இந்த குடும்ப அட்டைதாரா்களையும் துளசியாப்பட்டினம் பகுதி நேர அங்காடியில் இணைத்து, அந்த அங்காடியை முழுநேர அங்காடியாக மாற்ற வேண்டும்.
கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள், நாகை மாவட்டத்தில் பயிா்க் காப்பீட்டை ஏற்று நடத்தும் தனியாா் காப்பீட்டு நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதாக ஆட்சியரிடம் தெரிவித்தனா். மேலும் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என்று வேளாண் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா்.