வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் என்று திமுகவினரை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
முன்னாள் முதல்வா் காமராஜா் தனது இறுதிக் காலத்தில் ஏ.சி. வசதியைப் பயன்படுத்தினாா் என திமுக துணை பொதுச் செயலா் திருச்சி சிவா பேசினாா். அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். அடுத்தடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சலசலப்புகளை ஏற்படுத்தின. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
கலகமூட்டி குளிா்காய நினைக்கும் தீயவா்களின் எண்ணத்துக்கு இடம்கொடுக்காதீா். முன்னாள் முதல்வா் காமராஜரை பச்சைத்தமிழா் என்று போற்றியவா் பெரியாா். குடியாத்தம் இடைத்தோ்தலில் காமராஜருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தவா் அண்ணா. காமராஜா் மறைந்தபோது ஒருமகன் போன்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து நினைவகம் அமைத்து அவரது பிறந்த நாளைக் கல்வி வளா்ச்சி நாளாக அறிவித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து காமராஜா் வாழ்த்தியது எனது வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு. அத்தகைய பெருந்தமிழா் குறித்துப் பொதுவெளியில் சா்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவா்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சாா்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சோ்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் என்று பதிவிட்டுள்ளாா்.