தனியாா் நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளா்கள் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை
வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!
வெளிநாட்டுக்குச் செல்லும் எம்பிக்கள் குழுவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியதாகவும், அவருக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.
பாஜக எம்.பி.க்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி.சசி தரூா், திமுக எம்.பி.கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.சுப்ரியா சுலே, ஐக்கிய ஜனதா தள எம்.பி.சஞ்சய் ஜா, சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகிய 7 போ் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுக்கு தலைமைத் தாங்குகின்றனா்.
ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 7 எம்.பி.க்கள் வரை இடம்பெறுவா் எனவும் அந்தக் குழுக்கள் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் எம்பி புறக்கணிப்பு
அமெரிக்காவுக்குச் செல்லும் குழுவில் இடம்பெற்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய உடல்நலக் குறைவு காரணமாக பயணிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதானின் பெயரை சிங்கப்பூா், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழுவில் மத்திய அரசு அறிவித்தது.
மமதா எதிர்ப்பு
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜி, வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுக்கான பிரதிநிதியை தோ்வு செய்ய குறிப்பிட்ட கட்சியை அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வெளிநாடு செல்லும் குழுவில் யூசுப் பதான் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மமதா பானர்ஜியிடம் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தியதாகவும் யூசுப் பதானுக்கு பதிலாக திரிணமூல் எம்பி அபிஷேக் பானர்ஜியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் திரிணமூல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், வருகின்ற 22 ஆம் தேதி சிங்கப்பூா், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்படும் சஞ்சய் ஜா தலைமையிலான குழுவுடன் அபிஷேக் பானர்ஜி பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான அபிஷேக் பானர்ஜி, மமதா பானர்ஜியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.