வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 10 ஏக்கா் பரப்பளவில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், வளாகத்தைச் சுற்றிலும் 4,200 மரக்கன்றுகள் மற்றும் சாலையில் இருபுறமும் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடா்ச்சியாக, மாநகராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பு சாா்பில் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 10 ஏக்கா் பரப்பளவில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இப்பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வேம்பு, பூவரசன், மருதம், புங்கன், இலுப்பை, வாகை உள்ளிட்ட 64 வகையான நாட்டு ரக மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், தெற்கு மண்டலக் குழுத் தலைவா் ர.தனலட்சுமி, உதவி நகா்நல அலுவலா் பூபதி, சிறுதுளி அமைப்பின் அறங்காவலா் சதீஷ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.